மென் தமிழைப் உருவாக்கத்தின் கொள்கைகள்:
மென் தமிழை உருவாக்கும்போது சில கொள்கைகள் பின்பற்றப்பட்டன. அவையாவன
1. தமிழர்களுக்கு கற்பதற்கு எளிதாக இருக்க வேண்டும். ஆகையால் மென் தமிழின் குறியீடுகள் தமிழ் எழுத்துக்களை சார்ந்து இருக்கும்.
2. மென் தமிழின் குறியீடுகள் தமிழ் எழுத்துக்களுக்கு மாற்று அல்ல. அவை வட எழுத்துக்களைப் போல துணை எழுத்துக்களாகச் செயல்படும்.
3. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இக்குறியீடுகள் இருத்தல் வேண்டும். அதிக பட்ச குறியீடுகளின் எண்ணிக்கை 25 அதாவது 32 ஆகும். இதன் மூலம் இவைகளை மனப்பாடம் செய்தல் தமிழர் அல்லாதோருக்கும் எளிதாக இருக்கும். கணினியில் பயன்படுத்தவும் குறைந்த இடம் எடுத்துக் கொள்ளும்.
4. குறைந்த எழுத்துக்களைக் கொண்டு அதிக ஒலிகளைக் குறிப்பிட முடியவேண்டும். நான்கு மாற்றிகளின் மூலம் இது சாத்தியப்படுகிறது. இவ்வாறு உயிர் எழுத்துக்களுக்கும், மெய் எழுத்துக்களுக்கும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாற்றிகளைச் சேர்த்து ஓசை குறிப்பிடப்படுகிறது. இப்படி ஒவ்வொரு ஓசையும் ஒரு எழுத்து அல்லது குறியீட்டுத் தொகுப்பால் குறிக்கப்படுகிறது.
5. நெடில் உயிரெழுத்துக்கள் குறில் உயிரெழுத்துக்களைப் போன்று இருக்கும். வல்லின, இடையின மற்றும் மெல்லின எழுத்துக்கள் ஒன்று போல இருக்கும். மாற்றிகள் எளிதாக இருக்கும்
6. ஒரு எழுத்துக்கு கோடு, வளைவு மற்றும் சுழித்தல் ஆகிய அதிகபட்சம் மூன்று வடிவங்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஒரே கோட்டின் மேல் மீண்டும் எழுதக்கூடாது. ஒரு எழுத்தை எழுதி முடிக்க பேனாவைக் காகிதத்தில் இருந்து எடுத்து மீண்டும் எழுத வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.