மென் தமிழின் பயன்பாடுகள்:
1. வார்த்தை விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தலாம்.
2. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒலிகளை சரியான உச்சரிப்புடன் எழுத பயன்படுத்தலாம்.
3. கணிப்பொறியில் நிலையகல (fixed width / Monospace) எழுத்துருக்களைக் (fonts) கொண்டு முனையத்தில் (terminal) பயன்படுத்தலாம்.
4. 32 குறியீடுகள் மட்டுமே உள்ளதால் எளிதில் மனப்பாடம் செய்ய முடியும். பேச்சுத் தமிழைப் புதிதாக கற்பவர்களுக்கு இக்குறியீடுகள் ஆரம்ப கல்வியில் பயன்படலாம். தமிழ் எழுத்துக்களைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதால் பின்னர் தமிழ் எழுத்துக்களுக்கு மாறுவது எளிது. இவ்வெழுத்துக்களைக் கொண்டு விரைவாக பேச்சுத்தமிழை கற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சிதான் பிள்ளைத்தமிழ் (www.ptamil.com) ஆகும்.
5. பிற மொழி வார்த்தைகளை, பெயர்களை, அறிவியல் பெயர்களை சரியான உச்சரிப்புடன் எழுத பயன்படுத்தலாம்.
6. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இக்குறியீடுகளை மாறிகளாகப் (variables) பயன்படுத்தலாம்.
7. வரி வடிவம் இல்லாத மொழிகளுக்கு எழுத்தாக பயன்படுத்தலாம்.
8. தமிழ் அல்லது பிற மொழிகளில் பேச்செழுதுதல் (Speech to Text conversion), உரைபேசுதல் (Text to Speech conversion), பேச்சறிதல் (Speech Recognition) மென்பொருட்களில் ஒலியன்களைப் (Phonemes) பிரதிபலிக்கப் பயன்படுத்தலாம்.
தமிழ் எழுத்துக்களாக இக்குறியீடுகளைப் பயன்படுத்துவது சாத்தியம் என்றாலும், அது விரும்பத்தக்க பழக்கம் அல்ல என்பது என் கருத்து. ஜப்பானிய மொழியில் காஞ்சி, ஹிரகானா, கடகானா என்று மூன்று வித எழுத்துக்கள் உள்ளன. அவற்றில் காஞ்சி சீன எழுத்தைப்போன்றது. ஹிரகானாவும், கடகானாவும் இந்திய எழுத்துக்களைப் போல் எளிமைப்படுத்தப்பட்ட எழுத்துக்களாகும். இதில் ஹிரகானா ஜப்பானிய வார்த்தைகளை எழுதுவதற்கும், கடகானா பிற மொழி எழுத்துக்கள் மற்றும் அறிவியல் பெயர்கள் எழுதவும் பயன்படுத்தப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் கடகானாவின் பயன்பாடு போல, தமிழில், தமிழ் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்களுடன் சேர்த்து, மேற்குறிப்பிட்ட பயன்கள் உள்ள சமயத்தில் மென் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தலாம் என்பதே என் கருத்து. இதனால் அனைத்து குறியீடுகளும் தமிழ் எழுத்துக்களிலிருந்து சற்று மாறுபடுமாறு உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழ் எழுத்துக்கள், தமிழ் சொற்களின் ஒலி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அழகிய உணர்வுபூர்வமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டது. மென்தமிழ் எழுத்துக்களோ எப்படிப்பட்ட ஒலியையும் கூடுமானவரை சரியாக எழுத உதவவேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. ஆகவே, தமிழர் படிக்கும் தமிழ் வாக்கியங்களை எழுதுவதற்கு கூடுமானவரை மென்தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கருதுகிறேன்.